நினைத்தேன் எழுதுகிறேன்
 
  படித்தது: கடைசி சல்யூட்

போர்முனையின் யதார்த்தம் கற்பனைகளுக்கு அப்பாற்பட்டது. வீழ்த்துதலும், வீழ்த்தப்படுதலுமே பிரத்தியட்சமாக, நாளை என்ற நாள் பற்றிய உத்தரவாதம் இல்லாத வாழ்க்கைமுறை போர்வீரனுடையது. தன் இலக்கு நோக்கிய பயணத்தில் அவன் எதிர்கொள்பவர்களெல்லாம் அவனுடைய எதிரிகள்.

எதிரிகளுடன் போரிடுவதில் புதுமையில்லை. ஆனால், தன் எதிர்நிலையில் ஆயுதமேந்தி நிற்பவர்கள் தெரிந்த முகங்களாக, ஒரு காலத்தில் தன்னுடன் தோளோடு தோள் உரசி ஒரே படைப்பிரிவில் பணியாற்றியவர்களாக, அதிலும் சிலர் முன்பு நெருங்கிய தோழர்களாகவும் இருந்தவர்கள் எனும்போது, அக்கணத்தில் அப்போர்வீரனின் மனநிலை எத்தகைய குழப்பங்களுக்கெல்லாம் உள்ளாகும்? கை நடுக்கமின்றி துப்பாக்கியை கையாள்வது அவனால் இயலக்கூடியதா?

இத்தகைய நுட்பமான கருவை மையப்படுத்தி எழுதப்பட்ட "கடைசி சல்யூட்" எனும் மொழிபெயர்ப்புச் சிறுகதையை(மூலம்: சாதத் ஹசன் மண்ட்டோ. தமிழாக்கம்: ராமாநுஜம்) உயிர்மையில் (அக்டோபர் 05 இதழ்) படித்தது முதல் அதன் தாக்கம் என்னை வெகுநேரம் ஆக்கிரமித்திருந்தது.

ரப் நவாஸ் காஷ்மீர் யுத்த சமயத்தில் பாகிஸ்தான் படையில் சுபேதாராக பணியாற்றுகிறான். அவனும், அவனுடைய படையினரும் இந்திய காஷ்மீர் எல்லைப்புற குன்று ஒன்றில் நிலைகொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு எதிர்நிலையில் பதுங்கியிருந்தபடி இந்திய படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். எதிரிகளின் சண்டை சில சமயங்களில் விசித்திரமானதாக, துப்பாக்கி குண்டுகளுக்கு பதில் உரக்க கேட்கும் வசவுகளால் நடக்கிறது. முதலில் வசவுகளை பொறுத்துக்கொள்ளும் ரப் நவாஸ் படையினர், கொஞ்சம் நேரம் கழித்து அது தாள முடியாத அளவுக்கு போகப் போக வசவுக்கு பதில் வசவு என்று தொடங்குகின்றனர். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து எதிரிகளை தாக்க உத்தரவிடுகிறான். இரு தரப்பிலும் சில உயிரிழப்புகளுக்குப் பின் தாக்குதல் வெற்றிகரமாக முடிகிறது. எதிரிகள் பின் வாங்குகின்றனர்.

சிறிது இளைப்பாறல்களுக்குப் பிறகு மீண்டும் இருதரப்பிலும் தாக்குதல் தொடர்கிறது. இப்படியாக இரண்டு நாட்கள் கடக்கின்றன. வானிலை தாங்க முடியாத அளவிற்கு திடீரென்று குளிர்ச்சியாகிறது. ரப் நவாஸ் தன் ஆட்களுக்கு பலமுறை டீ கொடுக்க உத்தரவிடுகிறான். அதுவரை சலனமில்லாதிருந்த எதிர்தரப்பிலிருந்து 'ரப் நவாஸ்' என்று மிகச் சத்தமான குரல் ஒன்று கேட்கிறது. இவனும் பதில் குரல் கொடுத்தபடி அது யாரென்று அறிய முற்படுகிறான். அது அவனுடன் பிராயத்திலிருந்து ஒன்றாக வளர்ந்து, ஒன்றாக படித்து, ஒரே நாளில் ராணுவத்தில் சேர்ந்த அவனுடைய நெருங்கிய நண்பன் 'ராம் சிங்'. முதல் உலக யுத்தத்தில் இந்தியப் படையில் ஒன்றாக பல முனைகளிலிருந்து போரிட்டவர்கள். இப்போது காலம் இருவரையும் எதிரிகளாக்கி விட்டிருக்கிறது. நிர்பந்த எதிரிகள்!

கதையின் தொடர்ச்சியில் தோழமையான வசவுகளில் இருவரும் உரையாடிக்கொள்வதும், ரப் நவாஸின் விளையாட்டான துப்பாக்கி சுடுதல் ஒன்றில் ராம் சிங் காயமடைந்து இறப்பதுமென நேர்த்தியான பல கணங்கள் உணர்வுப்பூர்வமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. மூலக்கதையின் ஆசிரியர் பெயரைக் குறிப்பிட்டுள்ளவர்கள் மூலத்தின் மொழி எதுவென்பதை குறிப்பிடவில்லை.

0 0

மேற்கண்ட கதையைப் படித்தவுடன் உடனடியாக எனக்கு நினைவுக்கு வந்தது ஈழநாதனின் 'போராட்டம்" என்ற கவிதை.
 
  உடனடி பிரபல்யத்திற்கு உத்தரவாதமான உத்தி

எங்களது வாடிக்கையாளராகிய வக்கீல் ஒருவரை சந்திக்க கோர்ட் வளாகத்திற்குச் சென்றிருந்தேன். மாதத்தில் ஓரிரு முறை உத்தியோக நிமித்தம் அப்படி அந்தப் பக்கம் ஒதுங்குவதுண்டு. பெரும்பாலும் ஓய்வறையில்தான் இருப்பார். இன்று வெளியே வேறு சில சகாக்களுடன் மும்முரமான அரட்டையில் இருந்தார். கோர்ட்டில் வழக்கத்தைவிட கொஞ்சம் கூடுதலாகவே கூட்டம் தென்பட்டது. தாழ்வாரத்தில் நின்றுகொண்டிருந்த நபர்களை, அவர்கள் கையிலிருந்த ஹேண்டிகாம்கள் நிருபர்கள் என அடையாளம் காட்டின. பொதுவாக ஏதேனும் முக்கியமான வழக்குகளின் தீர்ப்பு நாட்களில் இது போன்ற பரபரப்பை அங்கே கண்டிருக்கிறேன். இன்றும் அதுபோல் ஏதாவது இருக்கலாம் என்று எண்ணியபடியே நண்பரை அணுகிக் கேட்டேன். அவர் சொன்ன விஷயத்தைக் கேட்டு கடும் எரிச்சல் உண்டானது.

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தமிழக தினசரிகளின் அன்றாட செய்திகளில் ஒன்றாகி விட்ட 'குஷ்பூ மீது வழக்கு' என்னும் அர்த்தமற்ற நாடகத்தின் பிரதியொன்று அங்கே அரங்கேறிக்கொண்டிருந்தது. வழக்கைத் தொடுத்திருக்கும் பெண் இங்கே ஏதோவொரு மகளிர் அமைப்பை சேர்ந்தவராம். வக்கீல்கள் இருவர் புடைசூழ வலம்வந்து, மீடியாவின் வெளிச்சத்தில் நனைந்துகொண்டிருந்தார். நாளைய பத்திரிகைகளில் அவர் பெயர் வரக்கூடும். அதைத் தவிர வேறு எந்தவிதமான கலாச்சார கோட்பாட்டியல் காரணிகளும் இச்செயல்களுக்குப் பின்னால் இருக்கும் என நான் நம்பவில்லை. இன்றைய தேதியில் உடனடி பிரபல்யத்திற்கு உத்தரவாதமான, மலிவான உத்தி இது போன்ற வழக்கு தொடுத்தல்கள்தான்.

வழக்கு 10ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக நண்பர் சொன்னார். ஏற்கெனவே மதுரை, திருச்சி உள்ளிட்ட பல ஊர்களில் குஷ்பூ மீது வழக்குகள் பதிவாகியுள்ளன என நினைக்கிறேன். வழக்குகள் தவிரவும், வேறு சில காமெடி காட்சிகளும் இந்த விவகாரம் தொடர்பாக அண்மை காலங்களில் அரங்கேறியுள்ளன. சேலம் மாநகராட்சியில் கண்டன தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அரியலூர் என நினைக்கிறேன்.. அங்கேயுள்ள ஒரு கல்லூரியின் மாணவர்கள் குஷ்பூவைக் கண்டித்து வகுப்புகளைவிட்டு வெளியேறி 'ஸ்டிரைக்' செய்தனர். மிகைப் பிரச்சாரத்தின் தாக்கம் எந்த மட்டங்களிலெல்லாம் விரவ சாத்தியப்பட்டது என்பதற்கு இவை சில எடுத்துக்காட்டுகள்.

குஷ்பூ விவகாரம் பெரிதாக்கப்பட்டதில் சன் டி.வியின் பங்கு முக்கியமானதாக எனக்கு தோன்றுகிறது. முதலில் திருமாவளவனின் அறிக்கையை முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டதும், அதனைத் தொடர்ந்த சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்த சில பெண்களின் எதிர்ப்பு கோஷத்தை "தமிழ் பெண்களின் கற்பை களங்கப்படுத்துவிதமாக பேசிய குஷ்பூவை எதிர்த்து தமிழகம் முழுவதும் பெண்கள் ஆவேசப் போராட்டம்" என்று பெரிதுபடுத்தியும், அச்சமயத்தில் சிங்கப்பூரில் இருந்த குஷ்பூவைப்பற்றி குறிப்பிடும்போதெல்லாம் 'சிங்கப்பூருக்கு உல்லாசப் பயணம் சென்றுள்ள குஷ்பூ' என்று அழுத்தி உச்சரித்ததும் அதன் உள்நோக்கத்தை வெளிப்படுத்துகின்றன. அவர்களின் மாலை தினசரியாகிய தமிழ் முரசில்கூட தொடர்ந்து இப்பிரச்சினைக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப்பட்டதாக சென்னை நண்பர் ஒருவர் கூறினார்.

நடந்தவைகளில் பெரும் ஆறுதல் அளிப்பதாக இருப்பது கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவாக பரவலாக ஒலிக்கத் துவங்கியிருக்கும் குரல்கள். மீடியாக்களின் பேரிரைச்சலில் மெலிதாகவே அவை காதுகளில் விழுந்தாலும், நமக்குள் நம்பிக்கை விதைகளை விதைத்துச் செல்பவை அவைகள்தாம்.
 
  என்.ஆர்.ஐக்கள் பற்றிய ஜூ.வி கட்டுரையை முன்வைத்து...

இந்த வார ஜூனியர் விகடனில் "இந்தியனே வெளியேறாதே" என்ற தலைப்பில் ஒரு சிறப்புக் கட்டுரை வெளியாகியுள்ளது. இந்தியாவில் படித்து பட்டம் பெறும் இளைஞர்கள் வெளிநாடுகளில் வேலை தேடிக் கொள்வதை பற்றிய கடுமையான விமர்சனங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.

வெளிநாட்டவர்களின் ஆய்வுக்கூடங்களில் பணியாற்றும் இந்தியர்களால் அந்த நாடுதான் முன்னேறுகிறது. இந்தியாவுக்கு பலனில்லை. நாஸாவிலும், மைக்ரோஸாஃடிலும் பணிபுரிபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்தியர்களே. ஆனால் அவர்களிடம் "தேசப்பற்று என்ற சமாச்சாரம் தேடிப் பார்த்தாலும் இல்லை", "தங்களை இந்தியர்கள் என்று குறிப்பிட்டுக்கொள்வதில் விருப்பம் இல்லாமல் இருக்கிறார்கள்" என்றெல்லாம் கட்டுரையாளர் என்.ஆர்.ஐ களை குற்றம் சாட்டுகிறார்.

இன்னொரு நாட்டை நாடிச் செல்வதில் ஒருவனுக்கு இருக்கும் சூழ்நிலை அழுத்தங்கள், அதன் பின்னணியிலுள்ள சமூகவியல் காரணங்களைப் பற்றிய விரிவான ஆய்வு இக்கட்டுரையில் கிடைக்கலாம் என்று நினைத்து படிக்க ஆரம்பித்து, முடிவில் ஏமாந்தேன். வழக்கமான பல ஜூ.வி கட்டுரைகளைப் போன்றே உப்புபெறாத சமாச்சாரங்களை மேற்கோள் காட்டி மூன்று பக்கங்களுக்கு இழுத்து, முடிவில் இந்தியர்களை மூளைச்சுரண்டல் செய்வதாகக் கூறி அமெரிக்கா முதலிட்ட நாடுகளையும், அங்கே பணிபுரியும் இந்திய இளைஞர்களையும் வசைபாடி முடித்திருக்கிறார்கள்.

இக்கட்டுரை ஒருபுறம் இருக்க, இதே பொருளில் நடைபெற்ற விவாதம் ஒன்றையும் அண்மையில் தொலைக்காட்சியில் கண்டேன். இவர்களின் அடிமன ஆதங்கத்தை புரிந்துகொள்ளும் அதேவேளை, "நீ இங்கேயே வாழ்ந்து, மறைந்தால்தான் இந்தியன்; இல்லையெனில் நீ அந்நியன்" என்பதாகிய இவர்களின் தேசப்பற்றுக்கான வரையறையை நினைத்து தலைச்சுற்றுகிறது.

ஒவ்வொருவனும் பிறப்பது பிழைப்பதற்கே. அவன் மட்டுமல்ல, அவனது குடும்பமும்; அவன் வாழ்வுடன் பின்னியுள்ள பொறுப்புகளும்.. இன்னும் பல காரணங்களும் அவனது தேவைகளை நிர்ணயிக்கின்றன. அதற்கான வாய்ப்பும், வசதியும் கிடைக்கும் இடம்நோக்கி அவனவனின் இயல்பான இடப்பெயர்ச்சி அமைகிறது. இதற்கு எல்லைக் கட்டுப்பாடு என்பதெல்லாம் கவைக்கு உதவாதது.

என்.ஆர்.ஐக்களின் தேசப்பற்று கேள்விக்குரியது என்றால் தென்னாப்பிரிக்கா சென்று பணியாற்றிய தேசப்பிதா காந்தியும் அதே மதிப்பீடுகளுக்கு உட்பட்டவரா? இல்லை., அனைத்து பட்டதாரி இளைஞர்களுக்கும் இங்கேயே தகுதியான வேலை கிடைத்து விடுகிறதா? அப்படிக் கிடைத்தால் எவன்தான் குடும்பத்தை பிரிந்து வாழ தலைப்படுவான்?

அதே கட்டுரையாளர் இன்னொரு சப்பை வாதத்தை முன்வைக்கிறார். அதாவது, வளைகுடா நாடுகளுக்கு வேலைக்குச் செல்பவர்களாவது பரவாயில்லை; அங்கே சம்பாதித்து இங்கே அனுப்பி வைக்கிறார்கள்; நமக்கும் கணிசமான அந்நிய செலாவணி கிடைக்கிறது. ஆனால் மற்ற நாடுகளுக்கு செல்பவர்கள் அங்கேயே செட்டிலாகி விடுகிறார்கள் -- என்கிறார். தேசப்பற்றுக்கு இவர் வரித்துக்கொண்டுள்ள வரையறை சில பாராக்களிலேயே மாபெரும் திரிபடைந்து, பணத்தின் அடிப்படையிலான மதிப்பீடாக பரிணமிக்கிறது.

இரு ஊடகங்களிலும் இத்தகைய விமர்சனங்களை முன்வைத்தவர் ஒருவரும் தமது வாதத்தின் ஒரு இடத்திலும் இந்தியாவில் நிலவும் வேலையில்லா திண்டாட்டம் பற்றி மூச்சு விடவில்லை. ஒரே ஒரு காலியிடத்துக்கு வந்து குவியும் ஓராயிரம் விண்ணப்பங்கள் பற்றிய கவலையும் அவர்களுக்கு இல்லை. தான் அன்றைய பொழுதில் பற்றிக்கொண்டிருக்கும் தலைப்பை தாங்குவதற்கு ஒரு பட்டி மன்ற பேச்சாளன் வைக்கும் முரட்டு வாதங்களாகவே இவர்களின் என்.ஆர்.ஐக்கள் பற்றிய விமர்சனங்கள் எனக்குத் தெரிகின்றன.

என்னுடைய கவலையெல்லாம் இதையெல்லாம் பார்த்து, படித்து, கருத்துக்களை அப்படியே மனதில் வாங்கிக்கொள்ளும் பாமர வாசகனைப் பற்றித்தான்.


பின்குறிப்பு: நான் என்.ஆர்.ஐ. அல்லன்.
 
  கோவை வலைப்பதிவர் சந்திப்பு - என் அனுபவம்

தமிழ் வலைப்பதிவாளர்கள் சந்திப்பு தொடர்ந்து சென்னையிலேயே நடைபெற்று வந்த சூழலில் "கோவையில் சந்திக்கலாமே" என்று காசியிடமிருந்து வந்த அழைப்பு உற்சாகத்தைக் கொடுத்தது. உடனே ஒப்புக்கொண்டேன்.

நாமக்கல்லில் இருந்து கோவைக்கு 4 மணி நேரம் பஸ் பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்தது. கோவை சென்றடைந்து சந்திப்பு நிகழவிருந்த காசி வீட்டை அடையும்பொழுது மணி மாலை 7 ஆகிவிட்டது. சரியாக அதே சமயத்தில் வெளியே சென்றிருந்த ஐகாரஸ் பிரகாஷூம் வந்து சேர்ந்தார்.

காசி வாசலில் நின்று வரவேற்றார்(இல்லையென்றால் வீட்டை கண்டுபிடித்திருப்பது சிரமம் :-)) அவர் வீட்டு மாடி போர்ஷனில் கூட்டம் தொடங்கியது. உள்ளூர் வலைப்பதிவர்களாகிய சோடாபாட்டில் பாலாவும், பாலமுருகனும்(கலெக்டர் பாலா) முன்கூட்டியே வந்து காத்திருந்தனர். ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்துகொண்டோம். வலைப்பதிவு நண்பர்களைத் தவிர கூட்டத்திற்கு வந்திருந்த மற்ற இருவர் -- தமிழ் பயணி எனும் இணையதளத்தை நடத்திவரும் சிவா மற்றும் காசியின் நண்பர் வழக்கறிஞர் சுபாஷ். தமிழ் மடலாடற் குழுக்களின் வழியாக சிவாவை ஏற்கெனவே அறிவேன்.

முதலில் சோடாபாட்டில் பாலாவின் நண்பரும், விஜய நகரம் எனும் வலைப்பதிவு நடத்தி வந்தவரும், அண்மையில் விபத்தில் மறைந்தவருமான கார்த்திக் பற்றி நினைவுகூறப்பட்டது. கார்த்திக் தமிழில் அதிகம் எழுதவில்லை, எனினும், வலைப்பூ இதழில் ஒரு வாரம் ஆசிரியர் பணியை ஏற்றிருந்தவர் என்பதால் பழைய வலைப்பதிவாளர்கள் அவரை அறிவர்.

இது நிகழ்ச்சி நிரல் என்று எதுவும் வரையறுத்துக்கொள்ளாத நட்பு முறையிலான சந்திப்பு என்பதால் பலதரப்பட்ட விஷயங்கள் குறித்து அளவளாவிக் கொண்டிருந்தோம். அவரவர் தொழில் மற்றும் வேலை சம்மந்தப்பட்ட பரிமாறல்கள் நடந்தன.

8.30 க்கு சுவையான சிற்றுண்டி. உண்மையில் பல்சுவை விருந்து என்றுச் சொன்னால் பொருத்தமாக இருக்கும்.(அண்ணியாருக்கு நன்றி!)

சிறிது நேரத்தில் சிவா விடைபெற்றுச் சென்றார். சிவா முழுக்க தமிழில் இயங்கும் blog hosting ஒன்றை நிறுவும் முயற்சியில் இருக்கிறார். yarl.net க்கு பிறகு அப்படியொரு முயற்சி தமிழில் மேற்கொள்ளப்படவில்லை என்பதால் இது வரவேற்கத் தக்கது. தமிழில் வலைப்பதிவு சேவைகள் எளிமைப்படுத்தப்படுவதோடு, அவற்றின் பயன்பாடு பரவலாக்கப்பட வேண்டியதும் அவசியம்.

சுகபோஜனம் முடிந்த அடுத்த அமர்வில் தற்சமயம் நம் முன்னிருக்கும் முக்கியமான பணியாகிய unicode standardization பற்றிய விவாதத்தை துவக்கி வைத்து காசி பேசினார். தமிழில் பயன்பாட்டில் இருக்கும் பல்வேறு encoding, fontகள் முறைப்படுத்தப்பட்டு கணித்தமிழின் ஒரே encoding ஆக ஒருங்குறி நிலை நிறுத்தப்பட வேண்டும்; அதை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்த வேண்டும்; அதற்கான சாத்தியக்கூறுகள் என்னென்ன -- என்பன இவ்விவாதத்தின் மையக் கருத்துக்களாக அமைந்திருந்தன. பயனர்களுக்கிடையே யூனிகோடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அதன்மூலம் இதனை செய்து முடிப்பதெல்லாம் தற்கால தமிழ்ச் சூழலில் சாத்தியமற்றது என்பதால் அரசு உத்தரவு ஒன்றால் மட்டுமே இதை நடைமுறைப்படுத்த முடியும் என்பதில் அனைவருக்கும் ஒத்த கருத்து இருந்தது. பல பயனுள்ள குறிப்புகளை பாலமுருகன் பகிர்ந்து கொண்டார். இதன் தொடர்ச்சியாக சென்னையில் செய்து முடிக்க வேண்டிய சில பொறுப்புகளை பிரகாஷ் ஏற்றுக்கொண்டார்.

விவாதத்தில் முன்வைக்கப்பட்ட யோசனைகளும், தீர்மானங்களும் சரியான திசையில் அமைந்திருந்தது குறித்து எனக்கு முழுதிருப்தி. பல காலமாக கருத்தியல் அளவில் மட்டும் தொடர்ந்து வரும் இவ்விஷயம், கணித்தமிழ் மிக வேகமாக பரவிவரும் இக்காலகட்டத்தில், வெகு விரைவில் பயன்பாட்டுக்கு வரவேண்டியது அதிமுக்கியமானதாகும்.

தீவிரமான ஒரு கருத்தாடலில் இருந்து சற்றே இறுக்கந்தளர்த்திக்கொள்ளும் விதமாக அனைவருக்கும் காபி வழங்கினார் காசி.

தன்னுடைய குறும்பட பயிற்சி பட்டரை அனுபவங்களை பகிர்ந்துகொண்டார் பிரகாஷ். அதுபற்றி தன்னுடைய வலைப்பதிவில் விரிவாக எழுதுவார் என்று எதிர்பார்க்கலாம். இந்த பயிற்சி பட்டரையை நடத்தும் நிழல் பத்திரிகையின் ஒரு பிரதியை பிரகாஷிடம் பெற்று படித்தேன். தமிழ் குறும்பட வட்டத்தில் தீவிரமான தளத்தில் இயங்கிவரும் அமைப்பாக தெரிகிறது. சென்னைவாசிகள் அதிர்ஷ்டசாலிகள்! அவர்களுக்கு இவை போன்றவைகளின் தொடர்புகளும், அவற்றின் செயல்பாடுகளும் அணுக்கமான தொலைவில் கிடைக்கின்றன.

அதற்கு பிறகு பல்வேறு பொது, அரசியல் விவகாரங்கள் குறித்த அளவளாவல்கள் நள்ளிரவு தாண்டியும் தொடர்ந்தன. காசியின் நண்பர் சுபாஷ் பல சுவையான அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். பிறகு 1.30 மணியளவில், பேசி தீராத பல விஷயங்களுடன் அனைவரும் விடைபெற்றுக் கொண்டோம்.

சென்னைக்கு வெளியே வலைப்பதிவாளர்கள் சந்திப்பு பரவலாக்கப்படுவதின் முன்னோடி சந்திப்பாக நான் இதனைக் காண்கிறேன். இதை சாத்தியப்படுத்தியதற்கும், அன்பான உபசரிப்புகளுக்கும் காசி அவர்களுக்கு நன்றி!

(புகைப்படங்கள் காசியின் பதிவில்)
 
  களங்களும், காரணங்களும் மட்டுமே வேறு

கோவை வலைப்பதிவாளர் சந்திப்பை முடித்துக்கொண்டு ஊர் நோக்கி நான் பயணித்த பேருந்தில் 'இந்தியன்' திரைப்படம் ஒளிபரப்பானது. அதில் கமலும், சுகன்யாவும் வாழ்க்கையில் இணைய காரணமான முக்கிய சம்பவமாக இந்திய சுதந்திரப் போராட்ட காட்சி: சுகன்யா உள்ளிட்ட பெண் சுதந்திர போராளிகள் அந்நிய துணிகள் பகிஷ்கரிப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு கிளர்ச்சி செய்கிறார்கள். அப்போது ஆங்கிலேயர்களினால் மேற்கொள்ளப்படும் போலீஸ் நடவடிக்கையின்போது அவர்கள் அணிந்துள்ள கதர் சேலைகள் உருவப்படுகின்றன. இதனால் அவமானம் தாங்காத அப்பெண்கள் அனைவரும் உயரமான ஒரு இடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

இருநூறு ஆண்டுகள் நம்மை அடிமைப்படுத்தி, அடக்கி ஆண்ட ஆங்கிலேயர்கள் மீது பொதுவான காலனி ஆதிக்க அரசியல் குற்றச்சாட்டுகள் மற்றும் ஜாலியன் வாலாபாக் படுகொலை, சில கடும் ஒடுக்குமுறைகள் பற்றிய குற்றச்சாட்டுகளை மட்டுமே நான் படித்திருக்கிறேன். mass rape, comfort women மாதிரியான பாலியல் குற்றச்சாட்டுகளை படித்ததில்லை. அத்திரைக்காட்சியில் துகிலுரிப்பு சம்பவத்துக்கு காரணமான அதிகாரியென 'அட்கின்ஸன் துரை' என்பவர் பெயரும் சுட்டப்படுகிறது. இதனால் ஒருவேளை இது நான் அறிந்திராத உண்மைச் சம்பவம்தான் போலும் என இணையத்தில் தேடிப் பார்த்தேன். எதுவும் தேறவில்லை. சுவாரஸ்யத்திற்கென அக்காட்சி வலிந்து புனையப்பட்டது என்றே தோன்றுகிறது.

00 00

பொதுவாகவே உலகின் பெரும்பாலான போர் நடவடிக்கைகள், இனக்கலவரங்கள், அடக்குமுறைகள் போன்றவற்றின் ஓர் அங்கமாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளும் இருந்து வந்துள்ளன. எதிராளியை அதிகபட்ச அவமானத்துக்கு உட்படுத்துவதாகவோ அல்லது உள்ளார்ந்த பாலியல் இச்சைகளின் வெளிப்பாடாகவோ அவை கட்டவிழ்கின்றன.

இரண்டாம் உலகப் போரின்போது கொரியப் பெண்கள் மீது ஜப்பானிய சேனையால் மேற்கொள்ளப்பட்ட comfort women பாலியல் அடிமைத்தனங்கள் மற்றும் அண்மை கால வரலாற்று பதிவுகளில் காண கிடைக்கும் போஸ்னிய-ஹெர்ஸ்கோவினா, ருவாண்டா, உகாண்டா, பங்களாதேஷ், லைபீரியா போன்ற நாடுகளின் உள்நாட்டு/அயல்நாட்டு போர்களின் போது பெண்களின் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகளையும் படிக்கும்போது எத்துணை கொடுமையான வன்குற்றங்களெல்லாம் போர் என்னும் பொதுப் பெயரில், ஒரு குறுகிய வட்டத்துக்குள் பொதுமைப்படுத்தப்பட்டிருக்கின்றன என்பது புரிகிறது. மேலும், போரில் mass rape ஆக நிகழும் இதனைவிடவும் தீவிரமான பாலியல் குற்றங்கள் அங்கிங்கென உதிரிகளாக நம் சமூகத்தின் அனைத்து தளங்களிலும் நிகழ்ந்து வருகின்றன என்பதை அன்றாடம் தினசரிகளை புரட்டினாலே போதும்; புரிந்துகொள்ளலாம்.

பலஹீனமான நிலைக்கு ஆளாகும் பெண் கால வரையரையற்று எப்போதும் பாலியல் பாதுகாப்பற்றவளாகவே தொடர்கிறாள். களங்களும், கட்டமைக்கப்படும் காரணங்களும் மட்டுமே வேறுபடுகின்றன.
 

ராஜா,
நாமக்கல்.

மின்னஞ்சல
பழைய வீடு
 

முந்தைய பதிவுகள்:
10/02/2005 - 10/09/2005 10/23/2005 - 10/30/2005 12/25/2005 - 01/01/2006 04/02/2006 - 04/09/2006 04/09/2006 - 04/16/2006

செய்தி ஓடை - RSS(atom.xml)

Listed in tamizmaNam.com, where bloggers and  


readers meet ::  தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு,  


திரட்டப்படுகிறது




Powered by Blogger