நினைத்தேன் எழுதுகிறேன்
 
  உடனடி பிரபல்யத்திற்கு உத்தரவாதமான உத்தி

எங்களது வாடிக்கையாளராகிய வக்கீல் ஒருவரை சந்திக்க கோர்ட் வளாகத்திற்குச் சென்றிருந்தேன். மாதத்தில் ஓரிரு முறை உத்தியோக நிமித்தம் அப்படி அந்தப் பக்கம் ஒதுங்குவதுண்டு. பெரும்பாலும் ஓய்வறையில்தான் இருப்பார். இன்று வெளியே வேறு சில சகாக்களுடன் மும்முரமான அரட்டையில் இருந்தார். கோர்ட்டில் வழக்கத்தைவிட கொஞ்சம் கூடுதலாகவே கூட்டம் தென்பட்டது. தாழ்வாரத்தில் நின்றுகொண்டிருந்த நபர்களை, அவர்கள் கையிலிருந்த ஹேண்டிகாம்கள் நிருபர்கள் என அடையாளம் காட்டின. பொதுவாக ஏதேனும் முக்கியமான வழக்குகளின் தீர்ப்பு நாட்களில் இது போன்ற பரபரப்பை அங்கே கண்டிருக்கிறேன். இன்றும் அதுபோல் ஏதாவது இருக்கலாம் என்று எண்ணியபடியே நண்பரை அணுகிக் கேட்டேன். அவர் சொன்ன விஷயத்தைக் கேட்டு கடும் எரிச்சல் உண்டானது.

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தமிழக தினசரிகளின் அன்றாட செய்திகளில் ஒன்றாகி விட்ட 'குஷ்பூ மீது வழக்கு' என்னும் அர்த்தமற்ற நாடகத்தின் பிரதியொன்று அங்கே அரங்கேறிக்கொண்டிருந்தது. வழக்கைத் தொடுத்திருக்கும் பெண் இங்கே ஏதோவொரு மகளிர் அமைப்பை சேர்ந்தவராம். வக்கீல்கள் இருவர் புடைசூழ வலம்வந்து, மீடியாவின் வெளிச்சத்தில் நனைந்துகொண்டிருந்தார். நாளைய பத்திரிகைகளில் அவர் பெயர் வரக்கூடும். அதைத் தவிர வேறு எந்தவிதமான கலாச்சார கோட்பாட்டியல் காரணிகளும் இச்செயல்களுக்குப் பின்னால் இருக்கும் என நான் நம்பவில்லை. இன்றைய தேதியில் உடனடி பிரபல்யத்திற்கு உத்தரவாதமான, மலிவான உத்தி இது போன்ற வழக்கு தொடுத்தல்கள்தான்.

வழக்கு 10ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக நண்பர் சொன்னார். ஏற்கெனவே மதுரை, திருச்சி உள்ளிட்ட பல ஊர்களில் குஷ்பூ மீது வழக்குகள் பதிவாகியுள்ளன என நினைக்கிறேன். வழக்குகள் தவிரவும், வேறு சில காமெடி காட்சிகளும் இந்த விவகாரம் தொடர்பாக அண்மை காலங்களில் அரங்கேறியுள்ளன. சேலம் மாநகராட்சியில் கண்டன தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அரியலூர் என நினைக்கிறேன்.. அங்கேயுள்ள ஒரு கல்லூரியின் மாணவர்கள் குஷ்பூவைக் கண்டித்து வகுப்புகளைவிட்டு வெளியேறி 'ஸ்டிரைக்' செய்தனர். மிகைப் பிரச்சாரத்தின் தாக்கம் எந்த மட்டங்களிலெல்லாம் விரவ சாத்தியப்பட்டது என்பதற்கு இவை சில எடுத்துக்காட்டுகள்.

குஷ்பூ விவகாரம் பெரிதாக்கப்பட்டதில் சன் டி.வியின் பங்கு முக்கியமானதாக எனக்கு தோன்றுகிறது. முதலில் திருமாவளவனின் அறிக்கையை முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டதும், அதனைத் தொடர்ந்த சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்த சில பெண்களின் எதிர்ப்பு கோஷத்தை "தமிழ் பெண்களின் கற்பை களங்கப்படுத்துவிதமாக பேசிய குஷ்பூவை எதிர்த்து தமிழகம் முழுவதும் பெண்கள் ஆவேசப் போராட்டம்" என்று பெரிதுபடுத்தியும், அச்சமயத்தில் சிங்கப்பூரில் இருந்த குஷ்பூவைப்பற்றி குறிப்பிடும்போதெல்லாம் 'சிங்கப்பூருக்கு உல்லாசப் பயணம் சென்றுள்ள குஷ்பூ' என்று அழுத்தி உச்சரித்ததும் அதன் உள்நோக்கத்தை வெளிப்படுத்துகின்றன. அவர்களின் மாலை தினசரியாகிய தமிழ் முரசில்கூட தொடர்ந்து இப்பிரச்சினைக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப்பட்டதாக சென்னை நண்பர் ஒருவர் கூறினார்.

நடந்தவைகளில் பெரும் ஆறுதல் அளிப்பதாக இருப்பது கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவாக பரவலாக ஒலிக்கத் துவங்கியிருக்கும் குரல்கள். மீடியாக்களின் பேரிரைச்சலில் மெலிதாகவே அவை காதுகளில் விழுந்தாலும், நமக்குள் நம்பிக்கை விதைகளை விதைத்துச் செல்பவை அவைகள்தாம்.
 
உங்கள் கருத்து:
குஷ்பு விவகாரத்தின் அடிப்படைக் காரணமே எதிர்ப்புணர்ச்சிதான். சினிமாவில் உள்ள இரண்டு யோக்கியதை அற்ற மனிதர்கள் தங்களுக்கிடையே இருக்கும் காழ்ப்புணர்ச்சியினை காட்ட தம்தாம் எடுத்துக் கொண்ட இந்த வீண போன சமாச்சரத்தில் சமூகம் ஏன்தான் இத்தனை அக்கரை காட்டுகிறதோ! சில வெட்டிபோக்கர்கள் குறுக்குவழியில் பிரபல்யம் அடைய எடுத்துக் கொள்ள இத்தனை பிரயத்தணங்கள் செய்வதற்கு சன் டிவி போன்ற பொதுஜன ஊடகங்கள் ஏற்படுத்தும் தாக்கம் தான். மறுபடியும் கூறுகிறேன் நம் தமிழ் மக்களுக்கு உருப்படவேண்டிய எத்தனையோ நல்விடயங்கள் இருக்கும் பொழுது, அதை விடுத்து, அனைத்து ஊடகங்களையும், இந்த வலைத்தொழில் நுட்பம் உட்பட, இன்னும் எத்தனை நாட்களுக்கு இதுபோன்று துர்பிரயோகம் செய்துக் கொண்டிருக்கபோகிறதோ நம் தமிழ் சமுதாயம். அதற்கு, உங்களை போன்ற மேதாவிகளும் எத்தனை காலம்தான் துணை போவீர்களோ!
 
நிறைய இடத்தில் கேஸ் போட்டாலும் ஒன்றுதான். ஒரே இடத்தில் கேஸ்போட்டாலும் ஒன்றுதான். நிறைய இடங்களில் கேஸ் போட்ட ஒரே காரணத்தினாலேயே வழக்கின் தன்மை மாறிவிடாது.
 
Post a Comment

<< முகப்பு

ராஜா,
நாமக்கல்.

மின்னஞ்சல
பழைய வீடு
 

முந்தைய பதிவுகள்:
10/02/2005 - 10/09/2005 10/23/2005 - 10/30/2005 12/25/2005 - 01/01/2006 04/02/2006 - 04/09/2006 04/09/2006 - 04/16/2006

செய்தி ஓடை - RSS(atom.xml)

Listed in tamizmaNam.com, where bloggers and  


readers meet ::  தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு,  


திரட்டப்படுகிறது




Powered by Blogger