நினைத்தேன் எழுதுகிறேன்
 
  என்.ஆர்.ஐக்கள் பற்றிய ஜூ.வி கட்டுரையை முன்வைத்து...

இந்த வார ஜூனியர் விகடனில் "இந்தியனே வெளியேறாதே" என்ற தலைப்பில் ஒரு சிறப்புக் கட்டுரை வெளியாகியுள்ளது. இந்தியாவில் படித்து பட்டம் பெறும் இளைஞர்கள் வெளிநாடுகளில் வேலை தேடிக் கொள்வதை பற்றிய கடுமையான விமர்சனங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.

வெளிநாட்டவர்களின் ஆய்வுக்கூடங்களில் பணியாற்றும் இந்தியர்களால் அந்த நாடுதான் முன்னேறுகிறது. இந்தியாவுக்கு பலனில்லை. நாஸாவிலும், மைக்ரோஸாஃடிலும் பணிபுரிபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்தியர்களே. ஆனால் அவர்களிடம் "தேசப்பற்று என்ற சமாச்சாரம் தேடிப் பார்த்தாலும் இல்லை", "தங்களை இந்தியர்கள் என்று குறிப்பிட்டுக்கொள்வதில் விருப்பம் இல்லாமல் இருக்கிறார்கள்" என்றெல்லாம் கட்டுரையாளர் என்.ஆர்.ஐ களை குற்றம் சாட்டுகிறார்.

இன்னொரு நாட்டை நாடிச் செல்வதில் ஒருவனுக்கு இருக்கும் சூழ்நிலை அழுத்தங்கள், அதன் பின்னணியிலுள்ள சமூகவியல் காரணங்களைப் பற்றிய விரிவான ஆய்வு இக்கட்டுரையில் கிடைக்கலாம் என்று நினைத்து படிக்க ஆரம்பித்து, முடிவில் ஏமாந்தேன். வழக்கமான பல ஜூ.வி கட்டுரைகளைப் போன்றே உப்புபெறாத சமாச்சாரங்களை மேற்கோள் காட்டி மூன்று பக்கங்களுக்கு இழுத்து, முடிவில் இந்தியர்களை மூளைச்சுரண்டல் செய்வதாகக் கூறி அமெரிக்கா முதலிட்ட நாடுகளையும், அங்கே பணிபுரியும் இந்திய இளைஞர்களையும் வசைபாடி முடித்திருக்கிறார்கள்.

இக்கட்டுரை ஒருபுறம் இருக்க, இதே பொருளில் நடைபெற்ற விவாதம் ஒன்றையும் அண்மையில் தொலைக்காட்சியில் கண்டேன். இவர்களின் அடிமன ஆதங்கத்தை புரிந்துகொள்ளும் அதேவேளை, "நீ இங்கேயே வாழ்ந்து, மறைந்தால்தான் இந்தியன்; இல்லையெனில் நீ அந்நியன்" என்பதாகிய இவர்களின் தேசப்பற்றுக்கான வரையறையை நினைத்து தலைச்சுற்றுகிறது.

ஒவ்வொருவனும் பிறப்பது பிழைப்பதற்கே. அவன் மட்டுமல்ல, அவனது குடும்பமும்; அவன் வாழ்வுடன் பின்னியுள்ள பொறுப்புகளும்.. இன்னும் பல காரணங்களும் அவனது தேவைகளை நிர்ணயிக்கின்றன. அதற்கான வாய்ப்பும், வசதியும் கிடைக்கும் இடம்நோக்கி அவனவனின் இயல்பான இடப்பெயர்ச்சி அமைகிறது. இதற்கு எல்லைக் கட்டுப்பாடு என்பதெல்லாம் கவைக்கு உதவாதது.

என்.ஆர்.ஐக்களின் தேசப்பற்று கேள்விக்குரியது என்றால் தென்னாப்பிரிக்கா சென்று பணியாற்றிய தேசப்பிதா காந்தியும் அதே மதிப்பீடுகளுக்கு உட்பட்டவரா? இல்லை., அனைத்து பட்டதாரி இளைஞர்களுக்கும் இங்கேயே தகுதியான வேலை கிடைத்து விடுகிறதா? அப்படிக் கிடைத்தால் எவன்தான் குடும்பத்தை பிரிந்து வாழ தலைப்படுவான்?

அதே கட்டுரையாளர் இன்னொரு சப்பை வாதத்தை முன்வைக்கிறார். அதாவது, வளைகுடா நாடுகளுக்கு வேலைக்குச் செல்பவர்களாவது பரவாயில்லை; அங்கே சம்பாதித்து இங்கே அனுப்பி வைக்கிறார்கள்; நமக்கும் கணிசமான அந்நிய செலாவணி கிடைக்கிறது. ஆனால் மற்ற நாடுகளுக்கு செல்பவர்கள் அங்கேயே செட்டிலாகி விடுகிறார்கள் -- என்கிறார். தேசப்பற்றுக்கு இவர் வரித்துக்கொண்டுள்ள வரையறை சில பாராக்களிலேயே மாபெரும் திரிபடைந்து, பணத்தின் அடிப்படையிலான மதிப்பீடாக பரிணமிக்கிறது.

இரு ஊடகங்களிலும் இத்தகைய விமர்சனங்களை முன்வைத்தவர் ஒருவரும் தமது வாதத்தின் ஒரு இடத்திலும் இந்தியாவில் நிலவும் வேலையில்லா திண்டாட்டம் பற்றி மூச்சு விடவில்லை. ஒரே ஒரு காலியிடத்துக்கு வந்து குவியும் ஓராயிரம் விண்ணப்பங்கள் பற்றிய கவலையும் அவர்களுக்கு இல்லை. தான் அன்றைய பொழுதில் பற்றிக்கொண்டிருக்கும் தலைப்பை தாங்குவதற்கு ஒரு பட்டி மன்ற பேச்சாளன் வைக்கும் முரட்டு வாதங்களாகவே இவர்களின் என்.ஆர்.ஐக்கள் பற்றிய விமர்சனங்கள் எனக்குத் தெரிகின்றன.

என்னுடைய கவலையெல்லாம் இதையெல்லாம் பார்த்து, படித்து, கருத்துக்களை அப்படியே மனதில் வாங்கிக்கொள்ளும் பாமர வாசகனைப் பற்றித்தான்.


பின்குறிப்பு: நான் என்.ஆர்.ஐ. அல்லன்.
 
உங்கள் கருத்து:
ராஜா, நானும் வாசித்தேன். கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் எப்படி இத்தனை sweeping ஆக எழுதுகிறார்கள் என்றே புரியவில்லை. கையிலே பத்திரிக்கை இருக்கிறது , பரந்த வாசகர்கள் இருக்கிறார்கள் என்ற அகந்தையில், ரொம்ப மேம்போக்காக, எந்த விஷயத்தைப் பற்றியும் மேஜையில் இருந்தே எழுதிக் குவிக்கிறார்கள். பாமர மக்களிடையே இதன் பாதிப்பு மிக அதிகமாக இருக்கும்.

இது போன்ற முரட்டுத்தனமாக, மிக மிக அலட்சியமாகச் செய்திகளை எழுதும் போக்கு அதிகரித்து வருகிறது. தினமலரின் அராஜகம் ஒரு புறம் என்றால், விகடனின் - சமூக நோக்கிலான விஷயங்களை அலசுகிறேன் பேர்வழி என்று - எடுத்தெறிந்து எழுதும் போக்கு மற்றொரு புறம். அயல்நாடு வாழ் இந்தியர்கள் குறித்தான விமர்சனம் இப்படியா இருக்கும்? மேல்படிப்புக்காக அயல்நாட்டுக்குப் போகத் துடிக்கும் மாணவர்களின் பார்வை எங்கே? படித்து முடித்து, இந்திய அரசுகளின் சிவப்பு நாடாக்களில் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்து விட்டு, வேணாம்டா சாமி என்று அய்ல்நாட்டுக்கே ஓடிப்போகும் விஞ்ஞானிகளின் பார்வை எங்கே? அயல்நாட்டு மேற்படிப்பு சாத்தியங்களை ஒதுக்கி விட்டு, இந்திய ஆட்சிப் பணித்துறையில் சேர்ந்து ஒன்றையணா மந்திரிகளுக்கு சல்யூட் அடிக்கும் அதிகாரிகளை ஜூனியர் விகடனுக்குத் தெரியுமா? சத்யேந்திர துபே போல பாதி வழியிலேயே take-off செய்துவிட்டு மனைவி குழந்தைகளை அம்போ என்று விட்டு வேண்டுமாமா?

அரபு நாடுகளில் இருப்பவர்கள் பணத்தை இந்தியாவுக்கு அனுப்புகிறார்கள். ஆனால் அமெரிக்காவில் இருப்பவர்கள் அங்கேயே சொகுசாக செலவழிக்கிறார்களாமா? என்ன லாஜிக் இது? பெரும்பாலான அரபு நாடுகளில் சொத்து வாங்கிக் குவிக்க முடியாது. மேற்கு நாடுகளில் இந்த விஷயத்திலே கட்டுப்பாடுகள் குறைவு. ஒருவன் தான் சம்பாதிக்கிற பணத்துக்கு வரி கட்டியதோடு, அவனுடைய சம்பாத்தியத்துக்கும் அரசாங்கத்துகுமான உறவு முடிகிறது. நீ ஏன் இங்கே பணத்தை அனுப்பவில்லை என்று யாரும் யாரையும் கேட்க முடியாது.

யதார்த்தம் என்ன என்றால், படிப்பு அனுபவம் அறிவு திறமை அனைத்தும் உள்ள ஒருவனுக்கு மேற்கத்திய நாடுகளில் கிடைக்கும் பொருளையும், நல்ல தார் போட்ட சாலைகளையும்., குடிநீரையும், சுகாதாரத்தையும், வசதிகளையும் அதே படிப்பு, அனுபவம் அறிவு திறமை கொண்ட ஒருவனுக்கு இந்தியாவால் இப்போதைக்கு அளிக்க முடியாது. இந்த உண்மை கசக்கத்தான் செய்யும். தேசப்பற்று, அது இதுவென்று சொல்லி அயல்நாடு வாழ் இந்தியர்களைத் தாக்குவது மகா கேவலம்.ஒருவனுக்கு தன்னுடைய வசிப்பிடம் எதுவாக இருக்க வேண்டும் என்று தேர்ந்தெடுக்கும் உரிமை சம்மந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே உண்டு.

இந்த கட்டுரை எழுதியவர்கள், பதிப்பித்தவர்கள், பதிப்பித்தவர்களின் அலுவலகத்தில் உயர் பதவி வகிப்பவர்கள் போன்ற அனைவருக்கும் தலா ஒருத்தராவது அயல்நாட்டில் வாழும் நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் கட்டாயமாக இருப்பார்கள். அவர்களிடம் இந்தக் கட்டுரை பற்றி கருத்துக் கேட்கும் தைரியம் விகடனுக்கு இருக்குமா?
 
what else can u expect from junior vikatan.they fill the space by writing such nonsense.this happens week after week.they dont know the facts nor have an understanding of the issues.but they write as if they know everything about the issue.they ask some one like ravi kumar for views and he gives some funny views.and that is enough for them.
 
நான் இதைப் பற்றி எழுதவேண்டும் என எண்ணியிருந்தேன் .உங்கள் கரூத்துக்களுடன் என் பல கருத்துக்கள் ஒத்துப் போகிறது.

ஆனால் IIT class மக்கள் எல்லோரும் வெளிநாடு வந்து விடுவது சில சமயம் வருத்தமாகத் தான் இருக்கிறது.அதே சமயம் இந்தியாவிலுள்ள அரசியலும் ,திறமைக்கான் அங்கீகாரம் இல்லாமையை
பற்றி எதுவுமே சொல்லாமல் விகடன் nri க்களை குறை சொல்லுவது சரியல்ல.

அதே சமயம் NRI களை தூக்கிப் பிடிப்பதும் தேவையில்லாதது ,அவர்களும் பிழைப்புப்க்குத் தான் போகிறார்கள்.நான் வளைகுடா நாட்டுக்கு போகிறவர்களை குறை சொல்லவில்லை ,அவர்கள் பாவம்.

அமெரிக்கா வரும் எங்களைப் போன்றோர் பல சமயங்களில் இந்தியாவைப் பற்றிக் குறை சொல்லும் போது ,மக்களின் பிரச்சினையை புரிந்து கொள்ளாமல் மேலோட்டமாக விமர்சிப்பது போன்றவை எரிச்சலை வரவைப்பவை .
 
விகடன் போன்ற பத்திரிக்கைகளின் கட்டுரைகள் முழு ஆராய்ச்சியுடன் தகுந்த ஆதரமற்ற கருத்துக்களுடன் மேம்போக்காக எழுதபடுபவை. ஜனரஞ்சகமாய் படிக்கும் மக்களுக்கு சினிமா, அரசியல் மற்றும் விடயங்களை கிளுகிளுப்பாக எழுதி உணர்ச்சி உரசல்களை உண்டாக்கும் ஒரு மலிவான மீடியா மாஃபியா கும்பல். உலகம் எப்படி தட்டையாகிக் கொண்டிருக்கிறது இந்த 21ம் நூற்றாண்டிலே என்பதை அறியாத உபதேசிகள். இதில் வேடிக்கை என்னவென்றால், திரைகடல் ஓடி திரவயம் தேடும் அறிவு ஜீவிகளும் தொட்டில் பழக்கத்தை விடமுடியாமல், இதன் பின்னே அலைவதுதான். காகித வழி இல்லை எனினும், தொழில்நுட்ப தொடரின் உதவியால், இதுபோன்ற வீணாய் போன விடயங்களை விவாதிப்பதுதான்.
 
Makkalae,

antha katturaiyin saaraamsam enna enraal inthiya makkalin vari panathil padithu vittu avarkalukku aethum seyyaamal ayal naattilaeyae thanki vidukiraarkal enbathu thaan. ithai inkae pathivu seythorum pinmozhinthorum othu kolvaarkal ena nambukiraen. nichayamaaka Rs 1,00,000 kkul nammaal uyarkalvi payilamudiyaathu. meedhi panam ellaam makkalin vari panamae. adhanaal naamum nammaal mudintha alavukku india makkalukku udhavuvom. pin kurippu naan oru NRI
 
பிரகாஷ்: நான் சொல்ல வந்ததை இன்னும் விளக்கமாக எழுதியுள்ளீர்கள். இதே ஜூ.வியில் இரண்டு வாரங்களுக்கு முன் இந்திய திருமணங்களில் அதிகரித்து வரும் செலவுகள் என்பதுபற்றி இதே போன்றதொரு அபத்தக் கட்டுரை வெளியாகியிருந்தது. அதற்கு பிறகு இந்த வாரம்தான் ஜூ.வி வாங்கினேன். தொடர்ந்து வந்த இதழ்களில் இன்னும் எதுபற்றியெல்லாம் எழுதினார்களோ தெரியவில்லை.


ரவி ஸ்ரீநிவாஸ்: /they ask some one like ravi kumar for views and he gives some funny views/
:-) ரவிக்குமார் சொல்லும் மேற்கத்திய நாடுகளில் மூளைச்சுரண்டல் குற்ற்ச்சாட்டு கற்பனையானது. ஆனால் சொல்வது வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை நம் மாணவர்கள் நாடுவதன் பின்னணியிலுள்ள காரணங்களாய் அவரால் சுட்டப்படுபவை உண்மையானவை. எந்த பிரச்சினையை எடுத்துக்கொண்டு அதன் ரிஷிமூலத்தை ஆராய்ந்தாலும் அது நமது நாட்டு அரசியல் சீர்கேட்டில்தான் போய் முடிகிறது.

கூத்தாடி: கருத்துக்கு நன்றி.

வெளிகண்ட நாதர்: தமிழின் மிகப் பரந்த வாசகர் வட்டம் கொண்ட, வெகுஜன வாசகனை நேரடியாகச் சென்றடையும் முன்னணி இதழின் பொறுப்பற்றத்தன்மை குறித்து இன்னும் எவ்வளவு நாள் 'அது அப்படித்தான்' என்ற மனோபாவத்தை கொண்டிருப்பது? பிரச்சினைகளின் அடிப்படையில் அவ்வப்போது இது போன்ற விமர்சனங்களை பதிவு செய்வது அவசியம் என்றே நினைக்கிறேன்.
 
முத்துராமன்: மாணவர்களுக்கு கல்வி புகட்டியதில் அரசாங்கத்துக்கு இருக்கும் பங்களிப்பை யாரும் மறுக்க முடியாது. ஆனால், அம்மாணவர்கள் வெளிநாட்டில் வேலை செய்ய விண்ணப்பிப்பதும், அங்கேயே வாழ்வதும் தேசதுரோகம் என்பதாக அதில் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் சாரமானவைதானா என்பதே எமது கேள்வி.
 
Post a Comment

<< முகப்பு

ராஜா,
நாமக்கல்.

மின்னஞ்சல
பழைய வீடு
 

முந்தைய பதிவுகள்:
10/02/2005 - 10/09/2005 10/23/2005 - 10/30/2005 12/25/2005 - 01/01/2006 04/02/2006 - 04/09/2006 04/09/2006 - 04/16/2006

செய்தி ஓடை - RSS(atom.xml)

Listed in tamizmaNam.com, where bloggers and  


readers meet ::  தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு,  


திரட்டப்படுகிறது




Powered by Blogger