காவிரி
சென்ற வருடத்தின் இச்சமய காலை பொழுதுகள் இத்தனை சுகமானதாக இருக்கவில்லை. அதிகாலை எழுந்து அம்மா தயாராக எடுத்து வைத்திருக்கும் குடங்களை பேன் பெல்ட் துணையுடன் சைக்கிளில் பூட்டிக்கொண்டு சில பர்லாங்குகள் தொலைவிலிருக்கும் கிணற்றிற்கு ஓடவேண்டும். ஊரெல்லாம் நீர் வற்றிவிட்டாலும் அதில் மட்டும் இன்னும் தண்ணீர் இருந்துகொண்டிருந்தது. அதோடு நல்ல தண்ணீர் என்பதால் குடிக்க, சமைக்க வைத்துக்கொள்ளலாம்.
கொஞ்ச நாள்தான்... அதுவும் வற்றிவிட்டது. பிறகு மீண்டும் முனிசிபாலிட்டி குழாயே கதி என்று ஆனது. வாரம் ஒரு நாள் மட்டும் அதில் தண்ணீர் வரும். எங்கே போனாலும் "நம்ம ஊறு தண்ணி மாதிரி வராதுப்பா' என்று பெருமையடித்துக்கொண்ட வாய்க்கு கலங்கலான, சுவை வேறுபட்ட அந்த நீரை பார்க்கவே பிடிக்கவில்லை; எப்படி குடிப்பது? முனிசிபாலிட்டியை குற்றம் சொல்லியும் பயனில்லை. ஆறு வற்றிய பிறகு அதன் நடுவில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து அதன்மூலம் ஏதோ நிலமையை சமாளித்து வந்தார்கள்.
அப்புறம் கொல்லிமலை குடிநீர் என்று ஒன்று ஊரில் பிரபலமானது. "கொல்லிமலையிலிருந்து லாரியில் தண்ணி கொணாந்து விக்கிறாங்க. கொடம் எட்டணாதான். தண்ணி கல்கண்டு மாதிரி இருக்கு" என்று பார்ப்பவர்களெல்லாம் அதற்கு சர்டிபிகேட் கொடுத்தார்கள். நானும் குடித்துப் பார்த்தேன். கல்கண்டு மாதிரி இல்லாவிட்டாலும் குற்றம் சொல்வதற்கில்லை. கொஞ்ச நாள் அதன் புண்ணியத்தில் தண்ணீர் பிரச்சினை தீர்ந்து வந்தது. ஒரு சமயம் கொல்லிமலை அடிவாரத்தில் இருக்கும் நண்பர் ஒருவரை பார்க்கச் சென்றுவிட்டு வரும்பொழுது, ஊருக்குள் திரியும் அந்த கொல்லிமலை குடிநீர் லாரிக்கு ரோட்டோரம் இருக்கும் கிணறு ஒன்றிலிருந்து மோட்டார் மூலம் நீரேற்றப்படுவதைக் கண்டு, அருகில் சென்று கிணற்றையும், அதன் நீரையும் பார்த்தவனுக்கு முகம் விளக்கெண்ணை குடித்தாற்போல் ஆனது. அந்த கிணற்றில் அத்தனை குப்பைக் கூளங்கள் மிதந்தன. அன்றோடு தண்ணீர் லாரிக்கு ஒரு கும்பிடு. மீண்டும் முனிசிபாலிட்டியே கதி.
காவிரியின் கரையில் இருக்கிறேன் என்று சொல்ல முடியாவிட்டாலும், சில மைல் தொலைவில்தான் எங்கள் ஊர் உள்ளது. அதனால் தண்ணீர் பஞ்சமெல்லாம் வாழ்க்கையில் பழக்கமேயில்லை. குழாயில் ஒரு நாள்விட்டு ஒரு நாள் தண்ணீர் வந்துகொண்டே இருக்கும். (அதை எப்படியெல்லாம் வீணடிப்போம் என்பது வேறு விஷயம்). அப்படியொரு பஞ்சம் வரக் காரணம் பருவமழை பொய்த்து, காவிரிப் படுகை சுத்தமாக வறண்டது. கர்நாடகா கனவான்களும் கையை விரித்துவிட்டார்கள். இதெல்லாம் எனக்கு மட்டுமேயான நினைவுகள் அல்ல; தமிழகத்தின் பெரும்பாலான இடங்களின் நிலைமை அதுதான். உள்நாட்டுவாசிகள் அனைவருக்கும் நினைவு இருக்கலாம்.
அச்சமயம் வந்த ஆடி 18க்கு ஆற்றுக்கு போய்விட்டு எழுதிய பதிவை இப்போது நினைவுகூறுகிறேன். பண்டிகையை கொண்டாட ஆற்றுக்குச் சென்ற மக்களுக்கு முட்டிகால் அளவுக்குகூட தண்ணீர் இல்லாமல் இருந்தது. சில இடங்களில்(திருச்சி என நினைக்கிறேன்) ஆற்றில் பம்ப் செட் அமைத்து அனைவர் மேலும் நீரைத் தெளித்தார்கள். கிடைத்த நீரில் நீராடிக்கொண்டோம்.
இது கடந்த வருடக் கதை.
இன்றும் ஆற்றுக்குச் சென்றேன். ஆனால் அனுபவம் முற்றிலும் வேறாக இருந்தது. காவிரியில் கடந்த 44 வருடங்களில் இல்லாத அளவுக்கு வெள்ளம்; மேட்டூர் அருகே ஆற்றில் மாட்டிக்கொண்ட மக்களை ஹெலிகாப்டர் மீட்டது; ஜேடர்பாளையத்தில் மீன் பிடிக்கச் சென்ற 30 மீனவர்கள் மாயம் -- என்று தொடர்ந்து அலறிய மீடியாக்கள் என்னை ஆற்றங்கரைக்குத் துரத்தின.
கரையென்று இத்தனை நாளும் மனதில் பதிந்திருந்த, புழங்கிய இடங்களெல்லாம் கண்ணுக்கே தெரியவில்லை. ஆங்காங்கே இருக்கும் உயரமான மணல் திட்டுகள், கரையோர தென்னந்தோப்புகள், அருகிலிருக்கும் வயல்வெளிகள் அனைத்தும் மூழ்கிக் கிடந்தன. நீரின் வேகம் அசாத்தியமானதாக இருந்தது. இத்தனை நாளும் தன்னில் கலக்கப்பட்ட, கரையோரங்களில் செய்யப்பட்ட அத்தனை அசுத்தங்களையும் கழுவி தன்னை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தது. அதன் உடலில் புத்துணர்ச்சியும், முகத்தில் உற்சாகமும் தளும்பியது. ஒரே வருடத்தில் நிலமை எப்படி மாறிவிட்டது என்று மனது பழைய நினைவுகளை அசை போட்டது. இயற்கை அளப்பரியது; அதன் பிரம்மாண்டம் அளவிட முடியாதது; கணிப்புகளுக்கு அப்பாற்பட்டது என்பதற்கு அத்தாட்சியாக கண்முன் காவிரி விரிந்து கிடக்கிறது.
காவிரியையே கண்ணார கண்டபடி அருகில் நிற்கும் சக மனிதர்களை உற்று நோக்கினேன். சிலர் உள்ளூர் ஆசாமிகள். சிலர் என்னை போன்ற அண்டை அயலார். யாராயினும், வெள்ளம் ஏற்படுத்தியுள்ள இடர்களையும் மீறிய ஒரு மகிழ்ச்சியை அவர்கள் முகத்தில் காண முடிகிறது. விடாது மழை தொடர்வதுபோல் இம்மகிழ்ச்சியும் தொடர்வதாக!