நினைத்தேன் எழுதுகிறேன்
 
  காவிரி

சென்ற வருடத்தின் இச்சமய காலை பொழுதுகள் இத்தனை சுகமானதாக இருக்கவில்லை. அதிகாலை எழுந்து அம்மா தயாராக எடுத்து வைத்திருக்கும் குடங்களை பேன் பெல்ட் துணையுடன் சைக்கிளில் பூட்டிக்கொண்டு சில பர்லாங்குகள் தொலைவிலிருக்கும் கிணற்றிற்கு ஓடவேண்டும். ஊரெல்லாம் நீர் வற்றிவிட்டாலும் அதில் மட்டும் இன்னும் தண்ணீர் இருந்துகொண்டிருந்தது. அதோடு நல்ல தண்ணீர் என்பதால் குடிக்க, சமைக்க வைத்துக்கொள்ளலாம்.

கொஞ்ச நாள்தான்... அதுவும் வற்றிவிட்டது. பிறகு மீண்டும் முனிசிபாலிட்டி குழாயே கதி என்று ஆனது. வாரம் ஒரு நாள் மட்டும் அதில் தண்ணீர் வரும். எங்கே போனாலும் "நம்ம ஊறு தண்ணி மாதிரி வராதுப்பா' என்று பெருமையடித்துக்கொண்ட வாய்க்கு கலங்கலான, சுவை வேறுபட்ட அந்த நீரை பார்க்கவே பிடிக்கவில்லை; எப்படி குடிப்பது? முனிசிபாலிட்டியை குற்றம் சொல்லியும் பயனில்லை. ஆறு வற்றிய பிறகு அதன் நடுவில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து அதன்மூலம் ஏதோ நிலமையை சமாளித்து வந்தார்கள்.

அப்புறம் கொல்லிமலை குடிநீர் என்று ஒன்று ஊரில் பிரபலமானது. "கொல்லிமலையிலிருந்து லாரியில் தண்ணி கொணாந்து விக்கிறாங்க. கொடம் எட்டணாதான். தண்ணி கல்கண்டு மாதிரி இருக்கு" என்று பார்ப்பவர்களெல்லாம் அதற்கு சர்டிபிகேட் கொடுத்தார்கள். நானும் குடித்துப் பார்த்தேன். கல்கண்டு மாதிரி இல்லாவிட்டாலும் குற்றம் சொல்வதற்கில்லை. கொஞ்ச நாள் அதன் புண்ணியத்தில் தண்ணீர் பிரச்சினை தீர்ந்து வந்தது. ஒரு சமயம் கொல்லிமலை அடிவாரத்தில் இருக்கும் நண்பர் ஒருவரை பார்க்கச் சென்றுவிட்டு வரும்பொழுது, ஊருக்குள் திரியும் அந்த கொல்லிமலை குடிநீர் லாரிக்கு ரோட்டோரம் இருக்கும் கிணறு ஒன்றிலிருந்து மோட்டார் மூலம் நீரேற்றப்படுவதைக் கண்டு, அருகில் சென்று கிணற்றையும், அதன் நீரையும் பார்த்தவனுக்கு முகம் விளக்கெண்ணை குடித்தாற்போல் ஆனது. அந்த கிணற்றில் அத்தனை குப்பைக் கூளங்கள் மிதந்தன. அன்றோடு தண்ணீர் லாரிக்கு ஒரு கும்பிடு. மீண்டும் முனிசிபாலிட்டியே கதி.

காவிரியின் கரையில் இருக்கிறேன் என்று சொல்ல முடியாவிட்டாலும், சில மைல் தொலைவில்தான் எங்கள் ஊர் உள்ளது. அதனால் தண்ணீர் பஞ்சமெல்லாம் வாழ்க்கையில் பழக்கமேயில்லை. குழாயில் ஒரு நாள்விட்டு ஒரு நாள் தண்ணீர் வந்துகொண்டே இருக்கும். (அதை எப்படியெல்லாம் வீணடிப்போம் என்பது வேறு விஷயம்). அப்படியொரு பஞ்சம் வரக் காரணம் பருவமழை பொய்த்து, காவிரிப் படுகை சுத்தமாக வறண்டது. கர்நாடகா கனவான்களும் கையை விரித்துவிட்டார்கள். இதெல்லாம் எனக்கு மட்டுமேயான நினைவுகள் அல்ல; தமிழகத்தின் பெரும்பாலான இடங்களின் நிலைமை அதுதான். உள்நாட்டுவாசிகள் அனைவருக்கும் நினைவு இருக்கலாம்.

அச்சமயம் வந்த ஆடி 18க்கு ஆற்றுக்கு போய்விட்டு எழுதிய பதிவை இப்போது நினைவுகூறுகிறேன். பண்டிகையை கொண்டாட ஆற்றுக்குச் சென்ற மக்களுக்கு முட்டிகால் அளவுக்குகூட தண்ணீர் இல்லாமல் இருந்தது. சில இடங்களில்(திருச்சி என நினைக்கிறேன்) ஆற்றில் பம்ப் செட் அமைத்து அனைவர் மேலும் நீரைத் தெளித்தார்கள். கிடைத்த நீரில் நீராடிக்கொண்டோம்.

இது கடந்த வருடக் கதை.

இன்றும் ஆற்றுக்குச் சென்றேன். ஆனால் அனுபவம் முற்றிலும் வேறாக இருந்தது. காவிரியில் கடந்த 44 வருடங்களில் இல்லாத அளவுக்கு வெள்ளம்; மேட்டூர் அருகே ஆற்றில் மாட்டிக்கொண்ட மக்களை ஹெலிகாப்டர் மீட்டது; ஜேடர்பாளையத்தில் மீன் பிடிக்கச் சென்ற 30 மீனவர்கள் மாயம் -- என்று தொடர்ந்து அலறிய மீடியாக்கள் என்னை ஆற்றங்கரைக்குத் துரத்தின.

கரையென்று இத்தனை நாளும் மனதில் பதிந்திருந்த, புழங்கிய இடங்களெல்லாம் கண்ணுக்கே தெரியவில்லை. ஆங்காங்கே இருக்கும் உயரமான மணல் திட்டுகள், கரையோர தென்னந்தோப்புகள், அருகிலிருக்கும் வயல்வெளிகள் அனைத்தும் மூழ்கிக் கிடந்தன. நீரின் வேகம் அசாத்தியமானதாக இருந்தது. இத்தனை நாளும் தன்னில் கலக்கப்பட்ட, கரையோரங்களில் செய்யப்பட்ட அத்தனை அசுத்தங்களையும் கழுவி தன்னை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தது. அதன் உடலில் புத்துணர்ச்சியும், முகத்தில் உற்சாகமும் தளும்பியது. ஒரே வருடத்தில் நிலமை எப்படி மாறிவிட்டது என்று மனது பழைய நினைவுகளை அசை போட்டது. இயற்கை அளப்பரியது; அதன் பிரம்மாண்டம் அளவிட முடியாதது; கணிப்புகளுக்கு அப்பாற்பட்டது என்பதற்கு அத்தாட்சியாக கண்முன் காவிரி விரிந்து கிடக்கிறது.

காவிரியையே கண்ணார கண்டபடி அருகில் நிற்கும் சக மனிதர்களை உற்று நோக்கினேன். சிலர் உள்ளூர் ஆசாமிகள். சிலர் என்னை போன்ற அண்டை அயலார். யாராயினும், வெள்ளம் ஏற்படுத்தியுள்ள இடர்களையும் மீறிய ஒரு மகிழ்ச்சியை அவர்கள் முகத்தில் காண முடிகிறது. விடாது மழை தொடர்வதுபோல் இம்மகிழ்ச்சியும் தொடர்வதாக!
 
உங்கள் கருத்து:
அங்க வந்து பாக்கணும்னு ஆசையா இருக்கு. உங்க விவரிப்பு ஆசையை அதிகப்படுதியிருக்கு. முடியுமான்னு பார்க்கலாம்!
 
கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது!

போன மாதம் ஒரு முன்னிரவு பெய்த மழையில் பெங்களூரில் நண்பர் வீட்டில் இருந்தேன். அருகில் பாலம் கட்டும் வேலை நடைபெற்றுக் கொண்டிருந்த படியால் மணல் மூட்டைகளைக் கால்வாயில் போட்டிருந்தார்கள். இதனால் அந்த இடங்களில் இருக்கும் கால்வாய்கள் நிரம்பி வழிந்து நண்பர் வீட்டுப் பகுதியில் தெருவில் கார்கள் எல்லாம் கண்ணாடியளவு நீரில். கதவிடுக்கு வழியே நீர் வீட்டினுள் புகுந்தது. இது அல்லாமல் drain நிரம்பியதில் குளியலறையின் வெளிக்குழாய் மூலமும் நீர் நிரம்பியதில் ஒரு மணி நேரத்தில் இருக்கும் சாமான்களை பரண்மேலோ அல்லது டேபிள் மீதோ போட்டு, நாங்களும் சேர்கள் மேல் அமர்ந்து கால்களைத் மேலே தூக்கி வைத்திருந்தோம். வீட்டிலே இரண்டடிக்கு (கழிவு) நீர். அப்போது தான் வெள்ளத்தின் சக்தி புரிந்தது. அந்த மழை நின்ற பிறகு தீயணைப்புப் படையினர் மணல் மூட்டைகளை அப்புறப்படுத்தி நீர் போக வழி செய்ததும் வந்த வேகத்தில் நீர் வடிந்து விட்டாலும், பல இடங்களில் வெள்ளத்தினால் உடைமைகளை இழப்பவர்களின் வேதனையில் ஒரு சதவிகிதமாவது புரிந்தது.

வெள்ளத்தினால் ஏற்பட்ட சேதங்களைப் பார்க்கும் போது மனம் கனக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் கரைபுரண்டோடும் காவிரியும், தென்பெண்ணையும், பாலாறும் காண்பதற்கரியதாகி விட்டது என்பதும் ஒரு சோகமே.
 
பகிர்தலுக்கு நன்றி....
நேற்றிரவு சன் செய்திகள் பார்த்தவுடன் இங்குள்ள நண்பனுக்கு தொலைபேசமுயற்சித்து காலையில்தான் பேசமுடிந்தது. அவர்கள் ஊரிலும் (பவானி அம்மாப்பேட்டை அருகில்) வீட்டைக்காலி செய்து வேறுஇடம் சென்றுவிட்டார்களாம். கால்நடைகளையும் நேற்று அழைத்துச்சென்றுவிட்டதாகக் கேள்வி. ஆறு பெருக்கெடுத்து, கிணறு (அவர்கள் வீட்டில் பெரும்பாலும் வாளியில் தண்ணீர் மொண்டு எடுக்கலாம் - கயிறுவைத்து இழுக்கத்தேவையில்லை:), வீடு, என்றெங்கும் வியாபித்திருக்கிறதாம்...

நம்ப ஊரில் எப்பவுமே வச்சா குடுமி... அல்லது மொட்டைதான். பள்ளிப்பாளையம் கூட பெருக்கெடுத்துவிட்டது என்றார்கள், நம்ப ஈரோடு பள்ளிப்பாளையமா!?
 
நன்றாக எழுதி இருக்கிறீர்கள். வார இறுதியில் ஊருக்குப் போகும் போது பள்ளிபாளையம் காவிரியைப் பார்க்க ஆவலாய் இருக்கிறேன். சென்னைத் தட ரயில்கள் நேற்று ரத்தானது போல் ஆகிவிடக் கூடாது என்றும் எண்ணிக் கொண்டிருக்கிறேன்.

தவறாக எண்ணிக் கொள்ள மாட்டீர்கள் என்று கருதுவதால் கூறுகிறேன். கொஞ்சம் ஒற்றுப் பிழைகளைக் கருத்தில் கொள்ளுங்கள்.

[இச்சமய காலை பொழுதுகள்]
[எப்படி குடிப்பது?]
[ஆழ்துளை கிணறுகள்]
[கொல்லிமலை குடிநீர்]
[தண்ணீர் பிரச்சினை தீர்ந்து]
[தண்ணீர் பஞ்சமெல்லாம்]
[பண்டிகையை கொண்டாட]
[தன்னை சுத்தப்படுத்..]
[என்னை போன்ற]
[...]
 
சந்தோஷம்தான். ஆனால் வெள்ள அபாயம் என்று பீதியைக் கிளப்புகிறார்களே..????!!!
பேஞ்சா பேஞ்சி கெடுக்குது. காஞ்சா காஞ்சி கெடுக்குது ( இது வேற, காவி சாமியாரை சொல்றதுக்கு மூக்கு வேர்க்குதுன்னு சாடை பேசப்போறாங்க..:-) )
 
நீங்க காவிரிக் கரையிலேயே போய்ப் பார்த்தீங்களா? நடக்கக்கூட முடியாத அளவு நெரிசல் என்று சொன்னதால் டிவி யில்தான் பார்த்தேன். மேல்கூரை மட்டுமே தெரிந்த வீடுகள் பயமுறுத்துகின்றன.
 
கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.

இந்த பதிவை நான் வாழும் சௌகரியமான சூழலில் என்னில் எழுந்த எண்ணங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதினேன். சென்ற வருடம் அனுபவித்த தண்ணீர் கஷ்டத்தையும், இப்போதைய மிகுதியான நீரோட்டத்தையும் ஒப்பிட்டு மகிழ்ந்தேன். ஆனால் தற்சமயம் கேள்விப்படும் வெள்ள அபாய அறிவிப்புகளும், பலியானோர் எண்ணிக்கைகளும் இந்த மகிழ்ச்சி சரியானதுதானா என்று சற்றே துணுக்குற செய்கின்றன.

கண்ணன்: உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. எழுதியுள்ள விதம் நேரடியான அனுபவ உணர்வைக் கொடுக்கிறது. இப்போதும் பெங்களூரில் கடும் மழை, வெள்ளம் எனக் கேள்விபட்டேன்.

அன்பு: அதே ஈரோடு பள்ளிபாளையம்தான். ஆனால் அது தற்போது நாமக்கல் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. பவானி கூடுதுறை, பள்ளிபாளையம், பரமத்தி வேலூர், மோகனூர், கொள்ளிடம் என காவிரி கரையோரம் எங்கும் வெகுவாகவே பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று வெளியாகிய வெள்ள பாதிப்பு செய்திகளைவிட இன்று கேள்விப்படுபவை இன்னும் தீவிரமாக இருக்கின்றன.

செல்வராஜ்: :-) தொட்டில் பழக்கம்.... இனி கவனமாக இருக்கிறேன். சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.

மூக்கு சுந்தர்: :-)) சுந்தர் மேலே எழுதியுள்ளதைப் படிக்கவும். மிதம் மிஞ்சும்வரை ரசனைக்குரியதாக இருந்தது. ஆனால் இன்று வெள்ள பாதிப்புகள் நினைத்ததைவிட கடுமை எனக் கேள்வியுறும்போது வருத்தமாக இருக்கிறது.

தனு: காவிரி கரை என் இடத்திலிருந்து 15 கி.மீ தொலைவில்தான் இருக்கிறது. டிவியில் கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தைக் காட்டினார்கள். அங்கேயிருந்து மிக அருகில் ஆற்று வெள்ளத்தைக் காணமுடியும் என்பதால் மக்கள் மிக அதிக அளவில் கூடுகிறார்கள். மற்ற இடங்களில் கூட்டம் அதிகமிருக்காது.
 
"வெச்சா குடுமி அடிச்சா மொட்டை" என்கிற மாதிரிதான் இருக்கு நம்ம காவேரியும். போன வருடம் வரை குடிநீருக்கு கூட உதவாத ஆறு இன்று கரையோர கிராமங்களை துவம்சம் செய்து இருக்கிறது. இது நன்மைக்கா?
 
Post a Comment

<< முகப்பு

ராஜா,
நாமக்கல்.

மின்னஞ்சல
பழைய வீடு
 

முந்தைய பதிவுகள்:
10/02/2005 - 10/09/2005 10/23/2005 - 10/30/2005 12/25/2005 - 01/01/2006 04/02/2006 - 04/09/2006 04/09/2006 - 04/16/2006

செய்தி ஓடை - RSS(atom.xml)

Listed in tamizmaNam.com, where bloggers and  


readers meet ::  தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு,  


திரட்டப்படுகிறது




Powered by Blogger