தேர்தல் கருத்துக் கணிப்புகள்
அரசியல்வாதிகளும், இலவச அறிவிப்புகளும், நடிகர் - நடிகையர் பட்டாளங்களும் போதாதென்று தமிழக தேர்தல் களத்தை கருத்துக் கணிப்புகள் வேறு கலங்கடித்து வருகின்றன. நாளொரு மேனியும் பொழுதொரு கணிப்புமாக வெளியாகிய வண்ணம் உள்ளன. அனைவருமே தங்களுடையதே மக்கள் கருத்தை பிரதிபலிப்பதாக கூறுகின்றனர். முடிவுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக உள்ளதுதான் இதில் வேடிக்கை.
குமுதமும், துக்ளக்கும் அதிமுகவுக்கே அறுதி பெரும்பான்மை என்கின்றன. குங்குமம் திமுகவுக்குதான் வெற்றி என்கிறது. இவ்விரண்டும் கட்சி சார்புடையன என்பதால் இதனை தவிர்த்து பார்த்தால் CNN-IBN மற்றும் The Hindu நாளிதழ் நடத்திய கணிப்பு இரு கூட்டணிக்குமே கிட்டத்தட்ட சமமாக ஆதரவு உள்ளதாக குறிப்பிடுகிறது.
கணிப்புகள் தங்களுக்கு சாதகமாக இருந்தால் மேற்கோள் காட்டிப் பேசுவதும், பாதகமாக இருந்தால் பணம் வாங்கி விட்டார்கள் என்று ஏசுவதுமாக அரசியல்வாதிகள் அவற்றை எதிர்கொள்கின்றனர். அவர்கள் பற்றி நமக்கு அக்கறையில்லை. ஆனால் இதுபோன்ற கணிப்புகள் பொது மக்கள் மனதில் உளவியல்ரீதியாக எம்மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பது சிந்தனைக்குரியது.
-- இதுபற்றி இவ்வார ஜூவியில் "மாய விளையாட்டு" என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. அதில் தொடர்ந்து வெளியாகும் பல சொதப்பலான கட்டுரைகளுக்கிடையே இது கொஞ்சம் உருப்படியானது --
கருத்துக் கணிப்புகள் பற்றி பலரும் பல கருத்துகளைக் கொண்டுள்ளனர். 'இதெல்லாம் மக்கள் மனதில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தி விடாது' என்று ஒரு தரப்பினரும், 'ஜெயிக்கிற கட்சிக்கே நம்ம ஓட்டு' என்னும் குறைந்தபட்ச ஆசையுடைய நிறை குறைகளை சீர்தூக்கி பார்க்கும் இயல்பில்லாத மக்களிடம் பெரும் உளவியல்ரீதியான தாக்கங்களை ஏற்படுத்தும் என்று இன்னொரு தரப்பினரும் கூறுகிறார்கள். என்னைப் பொருத்தவரை இரண்டாவது கருத்தையே ஆதரிக்கின்றேன். இக்கட்சிதான் வெற்றி பெறப் போகிறது என்பதாக word of mouth பரப்பப்படும் கருத்து "சாய்ந்தா சாயிறப் பக்கமே சாயும் செம்மறி ஆடுகள்" மனநிலை கொண்ட மக்களிடம் பெரும்பாலும் எடுபடுகிறது. அதற்கு இம்மாதிரியான கருத்துக் கணிப்புகள் காரணமாக அமைகின்றன.
இதை உணர்ந்ததினால்தான் முன்பு அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் pre-polls, exit polls இரண்டுக்கும் தடை விதிக்கக் கோரின. அதன்படியே தடையும் விதிக்கப்பட்டது. ஆனால் அதற்கு அரசியல் சட்ட பாதுகாப்பு இல்லாததினால் உச்ச நீதி மன்றத்தினால் தடை நீக்கம் செய்யப்பட்டு விட்டது.
வாக்காளன் தன்னுடைய வாக்கை யாருக்கு அளிப்பது என்பதை முடிவு செய்வதில் உளவியல் குறுக்கீடு செய்யும் இதுபோன்ற அவசியமற்ற கருத்துக் கணிப்புகள் தவிர்க்கப்பட வேண்டியவையும், தடை செய்யப்பட வேண்டியவையும் ஆகும். அதற்கேற்ற சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.