நட்சத்திரங்களின் ஆதாய அரசியல்
"நடிகை சிம்ரன் அதிமுகவுக்கு ஆதரவு" - இன்றைய தினசரிகளின் பரபரப்பு செய்தி இதுதான். சற்று முன்னர் வெளி மாநிலத்தில் வசிக்கும் நண்பர் ஒருவருடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது அவரும்கூட இதுபற்றி குறிப்பாக விசாரித்தார். செய்திக்கு அந்தளவு பிரபலமும், முக்கியத்துவமும் கிடைத்துள்ளது. நண்பர் அதிமுக அபிமானி என்பதால் "என்னய்யா இதுமாதிரி செய்தி ஒன்றைக்கூட திமுக பக்கம் காண முடியவில்லையே" என்று கிண்டலாக கேட்டார்.
தேர்தல் நெருங்கியதில் இருந்தே சினிமா நடிகர், நடிகைகள் அரசியல் களத்தில் தங்களை இணைத்துக் கொள்வது தொடர்கதையாகி வருகிறது. இவர்கள் அனைவரும் மார்க்கெட் இழந்தவர்கள் என்பது கவனிக்க வேண்டிய அம்சம். இதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று யோசிக்கும்போது, தாங்கள் சினிமா எனும் மாஸ் மீடியாவில் இழந்த முக்கியத்துவத்தை அதற்கு இணையான, மீடியா வெளிச்சம் அதிகம் உள்ள இன்னொரு துறையில் அடைய அரசியலை தேர்ந்தெடுத்திருக்கலாம். சொந்த வாழ்க்கையின் சர்வைவலும் ஒரு காரணமாக இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. இதை விடுத்து அவர்கள் பொதுசேவைக்காகத்தான் அரசியலில் 'குதித்து' இருக்கிறார்கள் என்பதை அதிமுகவினரே கூட நம்ப மாட்டார்கள்.
மேலும், இரு கழகங்களில் ஏன் அதிமுகவை அவர்கள் நாட வேண்டும் என்றால் அதற்கும் காரணம் உண்டு. அதிமுகவில்தான் சீனியாரிட்டி, இரண்டாம்-மூன்றாம் மட்ட தலைவர்கள் போன்ற hierarchy எல்லாம் கிடையாது. அனைத்து அதிகாரத்தையும் தன்னில் குவித்து வைத்திருக்கும் ஜெயலலிதா ஒருவரை மட்டும் காக்கா பிடித்தால் போதும். ஒரே நாளில்கூட 'ஓஹோ' என்று வந்து விடலாம். விசுவாசத்தை வெளிச்சம் போடும் திறமையைப் பொருத்து அதிர்ஷ்டம் இருந்தால் ராஜ்யசபா அல்லது வாரிய தலைவர் பதவியென்று ஏதாவது தேடிவரவும் கூடும். இதற்கு உதாரணமாக ராதாரவி, எஸ்.எஸ்.சந்திரன், ஆனந்தராஜ் போன்றவர்களை சொல்ல முடியும். எல்லாம் 'வை ராஜா வை' ஆட்டம் போலத்தான். அதிர்ஷ்டம் அடித்தால் அள்ளிக் கொள்ளலாம்.
இதையெல்லாம் திமுகவில் கனவிலும் எதிர்பார்க்க முடியாது. அங்கே பழம் தின்று கொட்டை போட்ட மூத்த தலைவர்களும் அவர்களின் வாரிசுகளும் பதவிகளுக்கு வரிசை கட்டி நிற்கிறார்கள். குறுகிய கால ஆதாயம் என்று எதையும் பார்க்க முடியாது. வேண்டுமானால் கலைஞரின் நெஞ்சில் இடம் கிடைக்கலாம். அதனால் பைசாவுக்கு பிரயோஜனம் இல்லை.
ஆக இதையெல்லாம் கணக்கிட்டே சுயலாபத்திற்காக உதிர்ந்த நட்சத்திரங்கள் அதிமுக மேடையில் ஒட்டிக் கொள்கிறார்களே தவிர இதில் அரசியல் முக்கியத்துவம் ஒன்றும் இல்லை.