லேட்டானாலும் லேட்டஸ்ட்
தமிழகத்தின் சமீபத்திய டிரெண்டான தமிழ் கலாச்சார காவல் போராட்டத்தின் அடுத்த கட்டத்திற்கான முஸ்தீபுகள் புலப்படுகின்றன. இம்முறை சர்ச்சையை முன்னின்று தொடங்கி வைத்திருப்பது ஜெயா டிவி. ஜெயா டிவி என்றதுமே அது யாருக்கு எதிரானதாக இருக்கும் என்பது தெள்ளத் தெளிவு. தமிழ் கலாச்சாரத்தை இழிவுபடுத்திவிட்டதாக கலைஞருக்கு எதிராகத்தான் குற்றச்சாட்டு கிளம்பியிருக்கிறது.
கலைஞர் எழுதிய தொல்காப்பிய பூங்கா புத்தகத்தில் ஆசிரியர் - மாணவி உறவை இழிவுபடுத்தும் விதமான சித்தரிப்புகள் இடம்பெற்றுள்ளதாகவும், அதை எதிர்த்து ஆசிரியர்களும், மாணவிகளும் போராட்டத்தில் குதிக்கப் போவதாகவும் ஜெயா செய்திகளில் சொன்னார்கள். சில பொதுஜனங்களும்(?) ஆவேசமாக கருத்துச் சொன்னார்கள். (கலவியைப் பற்றி போதித்த ஆசிரியரிடம் 'உங்கள் பாடத்தை உங்களிடமே செயல்படுத்தி பார்க்க எண்ணுகிறேன்' எனக் கூறி மாணவி அவரையே நாடுவதாக நூலில் உள்ளதாக செய்திகளில் இருந்து நான் புரிந்துகொள்கிறேன்).
தொல்காப்பிய பூங்கா வெளியான சமயத்திலும் சர்ச்சைகள் கிளம்பின. ஆனால் அது இலக்கணத்தை மையப்படுத்தியாக இருந்தது. நூலின் உட்கருத்துக்கள் இவ்வளவு நாள் கழித்து இப்போதுதான் விளங்கியுள்ளது போலும். (இதுதானே சீசன்!)
அடுத்து முரசொலியில் ஆரூர்சோழன் என்ற பெயரில் 'உடல் அரிப்பெடுத்தோர் ஆழச் சொறிந்துகொள்கிறார்; ஓநாய்கள் ஓலமிடுகின்றன' என்று கவிதையும், திமுக இலக்கியச் செல்வர்களிடமிருந்து அந்த குறிப்பிட்ட பகுதியின் இலக்கியச் சுவையை விவரித்து பக்கம் பக்கமாக புதிது புதிதாக விளக்கங்களும் கிடைக்கக்கூடும். எங்கோ ஒளிந்திருந்த ஆபாசம் இனி பத்திரிகைதோறும் வெளிச்சம் போடப்படக்கூடும். கழகங்களின் அரசியல்களில் எப்போதும் காமெடிக்கு பஞ்சமிருப்பதில்லை.